Friday, September 19, 2008

கண்டதும் கேட்டதும்

44 டிகிரி வெயிலிலும் நண்பர்களையும் ஊர்க்காரர்களையும் பார்க்கும் தருணத்தில் சூடு தெரிவதில்லை ( சட்டையை கழற்றி நிற்பவரை காண்க).
இது துபாய் என்னும் கனவுலகின் மறு பக்கம். இந்த படமெடுத்தது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். சரவணபவனில் உணவு உண்டு வெளியே வந்தவுடன்
இந்த கூட்டத்தை படம் பிடித்தால் என்ன என்று தோன்றவே உடனே வீட்டிற்கு சென்று காமெராவைத்தூக்கிக்கொண்டு அலைந்தேன். சிலவற்றை
வெட்டி ஒருங்கிணைத்ததுதான் இந்த போட்டோ.

என்னா..... நல்லா இருக்கியா... பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா.. அம்மா... அப்பா.. உன் வூட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? பணம்
அனுப்னேனே கெடச்சிதா? அங்கிருந்து சிரிப்பொலியுடன் கூடிய பதில் வரும், இவன் முகத்திலும் சிரிப்பு. (அத)செய்யச்சொன்னேனே என்னாச்சி ? அங்க போய் (அத) பாத்துட்டு வர சொன்னேனே பாத்தியா? என்னா இவ்ளோ செலவு, ஒரு கணக்கு வழக்கே கெடையாதா ? சிரிப்பொலி மறைந்து உம் உம் மட்டுந்தான் கேட்கும் அந்த பக்கத்திலிருந்து. இது நான் துபாயில் வெள்ளிக்கிழமைகளில் அதிலும் மாத ஆரம்பத்தில் தெருவில் நடந்து செல்லும்பொழுது வழக்கமாக என் காதில் விழும் வார்த்தைகள். அடிக்கடி இது முற்றிப்போய் செல் போனில் தாம் இருப்பது தெருவென்றறியாது வசை பாடிக்கொண்டிருப்பர். ஏன் இப்படி என நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
உன்னைத்தவிர உன் குடும்ப பாரங்கள அத்தனையும் சுமந்து, நீ இல்லாத ஓரிடத்தில் அதுவும் நீ இல்லையென்பதை ஊரே தெரிந்த இடத்தில் அவள் தனியாக போராடிக்கொண்டிருப்பது உனக்கேன் புரியவில்லை? நீ இல்லாத வெற்றிடத்தை நிரப்ப முயலும் கழுகுக் கண்களிடையே தன் மானத்தையும் உன் குலப்பெயரையும் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அந்த உயிரிடம் பேசும் விதமா இது?
இவன் விடுப்புக்கு தாயகம் சென்றவுடன் தன் குழந்தையே தன்னருகில் வராதபொழுது ( சில சமயம் அங்கிள்- மாமா என அழைக்கப்பட்ட கதையும் உண்டு) இது உன் அப்பாடா செல்லம் பயப்படாதே, இங்க பாரு... அப்பா ஒனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காங்கன்னு! என இவன் குழந்தையை இவனுக்கே அறிமுகம் செய்து ஒரு வழியாக இவனுடன் ஒட்டவைக்கிறாள். நாட்கள் நகர்ந்து மறுபடியும் விமானமேறி இங்கு வந்த அடுத்த மாதம் என்னடீ.. அறிவு கெட்டவளே.... வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொள்ளும்.
பாறாங்கல் நெஞ்சே... உன்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் உன் பாதியை நீ அறிந்து கொள்வது எப்பொழுது? பண்பான வார்த்தைகளுடன் பாசத்தைப் பொழிந்து பார். கிழவனாக நீ முதிரும்பொழுது உன் பிள்ளைகள் திரும்பப்பொழியும் நீ பொழிந்ததை.
இனி மேலாவது வெள்ளிக்கிழமைகளில் அவளும் குழந்தைகளும் உன் பேச்சைக்கேட்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கையில் வசவு பாடாதே.

No comments: