Thursday, January 29, 2009

யோவ், வரிசையில நிக்கிறது தெரியல ?

வரிசை;
காலை 6 மணிக்கு 2 மீட்டர் தூரம் கூடத்தெரியாத பனியில் ஐக்கிய அரபு நாட்டில் வழங்கப்படும் அடையாள அட்டையை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். உலகத்தின் வெவ்வேறு இடத்தில் இருந்து துபாயிக்கு வந்து வாழும் மக்கள் ஒரே வரிசையில் நிற்கிறார்கள். உள்ளுர்வாசி எவரையும் காணோம். அரை மணி நேரத்திற்குள் முத்து முத்தாய் தலையில் பனித்துளி. ஆனாலும் எவரும் முட்டி மோதி உள் செல்ல முயற்சிக்கவில்லை. நடுங்கும் குளிரில் உதறலுடன் பொறுமை காக்கிறார்கள் 7;30 வரை.

மனம் அப்படியே ஆறு மாதம் பின் செல்கிறது, இடம் திருச்சி விமான நிலையம். விமானம் தரையை தொட்டதும் இடுப்புப்பட்டையை அவிழ்த்துவிடுகிறார்கள் மக்கள், முழுவதுமாக நிற்பதற்கு முன் தலைக்குமேல் பெட்டிகள் வைக்கக்கப்படும் பெட்டகம் திறக்கப்படுகிறது. தயவு செய்து திறக்காதீர்கள என விமான பணிப்பெண்கள் பலமுறை அறிவித்த பிறகும் நம் மக்கள் கேட்பதில்லை. அவ்வளவு அவசரம். (செல் போன் உபயோகிப்பது மிகவும் ஆபத்து என சொன்ன பிறகும் இறங்கும் தருணத்தில் செல்போன் உபயோகிக்கும் முட்டாள்களும் இல்லாமல் இல்லை) 5 மணி நேரம் பறந்துவந்தவனுக்கு 5 நிமிடம் பொறுக்க முடிவதில்லை.

விமானத்திலிருந்து இறங்கியதும் குடியேற்றம் பகுதியில் வரிசையா இருக்க வேண்டும் என்பதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு முன் வரிசை வரிசை வரிசை என்றிருந்தவர்கள் அந்த 4 மணி கடந்ததும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மாறி விடுகிறார்கள்.

ஒரு காலத்தில் படிப்பறிவு இல்லாத பலர் வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு சென்றார்கள். தற்பொழுது அந்த நிலை மாறி, பட்டப்படிப்பு படித்த பலரும் அங்கு வேலைக்குச்செல்கிறார்கள். வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இருப்பினும் இந்த மாதரி சில/பல அவசரக்குடுக்கைகளின் செயல் மனதை வருத்தப்பட வைக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம் சமூகம், படிப்பறிவு, சூழ்நிலை அல்லது கலாச்சாரம் ! பண்பு என்பது சிறு வயதில் நமக்கு புகட்டப்படுவதும் நாம் வளர்ந்த பிறகு மற்றவர்களையும் மற்றவைகளையும் கண்டு உணர்ந்து கற்றுக்கொள்வதுமாகும்.
கலாச்சாரமும் சூழலும் பெரும்பாலாக எல்லார்க்கும் பொதுவானதுதான். ஆனால் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் ஒரு குழந்தை கற்கும் பண்பு அடிப்படையும் அஸ்திவாரம் ஆகும். இது மனிதனை மனிதனாக நிலைக்கச்செய்கிறது. வயிற்றுக்கஞ்சிக்கே நாள் முழுதும் உழைக்கும் வர்க்கம் இந்த பண்பை எங்கிருந்து தம் பிள்ளைகளுக்கு புகட்டும்? " தண்ணியில் " மிதக்கும் தந்தை மக்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப்போகிறான். இல்லை
இன்னும் கொஞ்சம் வாழ்கையின் தரம் உயரந்தவர்களாகட்டும் அதாவது அன்றாட கூலி வேலை செய்பவர்களுக்கும் கொஞ்சம் மேலே உள்ளவர்கள்.இவர்கள் வாழ்கைத்தரம் உயரந்திருப்பினும் தம் பிள்ளைகளுக்கு நற்பண்பு, நன்னடத்தை எந்த அளவிற்கு சொல்லித்தர இயலுகிறது?. அல்லது இவர்களில் எத்தனை பேர் பள்ளிக்குச்சென்று படித்திருக்கிறார்கள். உலக நடப்பில் சொற்பமே அறியும் இவர்கள் என்ன செய்வார்கள். (அரசாட்சியில் இருக்கும் மந்திரி சட்ட மன்ற/பாராளுமன்ற உருப்பினர்களின் நடத்தையும் பண்பும் எப்படி உள்ளதென்பது எல்லோரும் அறிந்ததே)
சரி பெற்றோர்களால் சொல்லித்தர இயலாததை ஆசிரியர் அல்லாது வேறு யார் சொல்லித்தர இயலும். தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் பங்குதான் இதில் மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். ஒரு சிறு குழந்தை, பள்ளிச்சிறுவன் அல்லது சிறுமி இவர்களின் மனதில் நன்னடத்தையை நற்பண்பை வளர்ப்பவர்கள் இவர்கள்தான். சமூகத்தின் மிகப்பெரிய பொறுப்பு இவர்களிடமிருக்கிறது என்பதை இவர்கள் கட்டாயம் அறிய வேண்டும். ஆனால் நம் ஆசிரியர் வர்க்கம் எப்படி உள்ளது. 100ல் 15 -20 பேர் இப்படி இருப்பார்களா ? வேலைக்குச் செல்வதே ஒரு போராட்டமாக கருதும் இவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஜாட்கோ அது இது என்று திரிகிறார்கள்.பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பில் சொல்லித்தர முயலும் நம் ஆசிரியர் வர்க்கம் 6-ம் வகுப்பில் சொல்லித்தர வேண்டிய பொது அறிவையும் நற்பண்புகளையும் பத்தாம் வகுப்பு, ஏன் 12 ஆம் வகுப்பு வரை கூட சொல்லித்தருவது இல்லை என்பதே உண்மை.வேலை கிடைக்கும் வரை மற்ற ஆசிரியர்களை குறை சொல்லும் அதே வர்க்கம் தனக்கு அந்த வாய்ப்பு கிட்டும்பொழுது தன் பழைய சொற்களை மறந்து தானும் சகதியில் சேரந்துவிடுவது மிகவும் கொடுமை. வேலை கிடைத்த பின் மனித நேயத்தையே மறக்கும் இவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க இயலும்?

சட்டம் பயிலச்செல்லும் மாணவர்களே தங்கள் சக மாணவர்களை அடித்துக் கொல்லும் கொடுமை நம் நாட்டில் நடக்கிறது. சட்டம் அறியும் முன்பே இப்படி நடந்து கொள்பவர்கள் சட்டம் பயின்ற பின் எப்படி நடந்து கொள்வார்கள்?

மனம் எங்கோ ஆரம்பித்து எங்கோ செல்கிறது. சரி விசயத்துக்கு வருவோம் இது மாதிரி எல்லாம் நடந்துக்கக்கூடாதுன்னு இங்கிலீசுலேயும் ஹிந்தியிலேயும் மாறி மாறி
சொல்ரீங்களே அத கொஞ்சம் தமிழ்லயும் சொன்னா எப்படி? எந்த மொழி பேசும் இடத்தில் விமானம் இறங்குகிறதோ அந்த மொழியில் ஒரு வரி. அட அந்த அம்மணிகளோ
அல்லது அய்யாமார்களோ (விமானப் பணியாளர்கள் தான்) சொல்லவேண்டாம். கம்ப்யூட்டரில் பதியவைத்து அதையே (தேஞ்சிப்போன ரெக்கார்டு மாதரி) போடலாமே !

Saturday, November 8, 2008

காற்றில் மிதந்தவை

மலரும் மங்கையும்..

பூவே, அழகு உன் புன்னகை
நீ பூச்செடியிலிருந்தால்
மலரே, மணமன்றோ அக்காற்று
நீ மலரும் அத்தருணத்தில்
பூவும் மலரும் அக் கார்குழலில்
அழகன்றோ அவள் பாரினில்

=====++====

பாலையில் பணம்


காணாமல் போனதே
அம் மாலைப் பொழுது
காணாமல் போனதே
அந் நறுமணக்காற்று
காணாமல் போனதே
அக் குறும்பு பார்வை
கடல் கடந்து வந்தேனே
திரவியம் தேட
எங்கும் மணல் தானோ
மணலும் பணம் தானோ
விரகம் இது தானோ
விரதமும் இது தானோ
----------------------


பொக்கை வாய் சின்ன பாட்டி


முத்துப் பல் சிரிப்பு
தத்து பித்து பேச்சு
காணாமல் போச்சு
அம் மழலை பேச்சு
பாப்பா பெருசாச்சு
பல் விழுந்து போச்சு
பொக்கைப் பல் பாட்டி
எங்கே அந்தப் பல் போச்சு

Friday, October 17, 2008

பெண் சிசு கொலை

யானறியேன் இரவு பகல்யாதென்று
அறிவேன் அவ்வன்பும் கதகதப்பும்
யானறியேன் என்னாள் வரை இவ்வுலகம்
அறிவேன் இது சிறுகாலம்தான்
யானறியேன் நான் ஆணா பெண்ணா
அறிவேன் என்னுள் மாறுதலை
யானறியேன் மறு சென்மம் செவி சாய்த்ததில்
அறிந்தேன் நேரிடலாம் மறு சென்ம மெடுக்க

இன்புற்றேன் பூக்கரமொன்று வருடுவதை மறுகணம்
உணர்ந்தேன் ஒருவித நடுக்கத்தை
இன்பமும் துன்பமும் கலந்த்தோ எதிர்காலம் எனில்
இவ்வறையன்றோ சொர்க்கலோகம்
போதுமென்றது என் வளர்ச்சியை இயற்கை
வெளி வந்தேன் அன்னையின் அலறலுடன்

கூசியது கண் அலறினேன் நான்
அரற்றினாள் மருத்துவச்சி ஐயோ பெண் குழந்தை
கதறினாள் அன்னை கதறுவான் அப்பன்
கதறுவாளா என்னைக் கொல்லவரும் அச்சென்மம்
மறந்துவிட்டாளே அவள் பெண்ணென்பதை.
யானறியேன் மாய்க்கச் சொன்னது யாரென்று
அறிந்தேன் பிறவியில் சிறந்தது மானிடமல்லவென்று.

Friday, September 19, 2008

கண்டதும் கேட்டதும்

44 டிகிரி வெயிலிலும் நண்பர்களையும் ஊர்க்காரர்களையும் பார்க்கும் தருணத்தில் சூடு தெரிவதில்லை ( சட்டையை கழற்றி நிற்பவரை காண்க).
இது துபாய் என்னும் கனவுலகின் மறு பக்கம். இந்த படமெடுத்தது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். சரவணபவனில் உணவு உண்டு வெளியே வந்தவுடன்
இந்த கூட்டத்தை படம் பிடித்தால் என்ன என்று தோன்றவே உடனே வீட்டிற்கு சென்று காமெராவைத்தூக்கிக்கொண்டு அலைந்தேன். சிலவற்றை
வெட்டி ஒருங்கிணைத்ததுதான் இந்த போட்டோ.

என்னா..... நல்லா இருக்கியா... பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா.. அம்மா... அப்பா.. உன் வூட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? பணம்
அனுப்னேனே கெடச்சிதா? அங்கிருந்து சிரிப்பொலியுடன் கூடிய பதில் வரும், இவன் முகத்திலும் சிரிப்பு. (அத)செய்யச்சொன்னேனே என்னாச்சி ? அங்க போய் (அத) பாத்துட்டு வர சொன்னேனே பாத்தியா? என்னா இவ்ளோ செலவு, ஒரு கணக்கு வழக்கே கெடையாதா ? சிரிப்பொலி மறைந்து உம் உம் மட்டுந்தான் கேட்கும் அந்த பக்கத்திலிருந்து. இது நான் துபாயில் வெள்ளிக்கிழமைகளில் அதிலும் மாத ஆரம்பத்தில் தெருவில் நடந்து செல்லும்பொழுது வழக்கமாக என் காதில் விழும் வார்த்தைகள். அடிக்கடி இது முற்றிப்போய் செல் போனில் தாம் இருப்பது தெருவென்றறியாது வசை பாடிக்கொண்டிருப்பர். ஏன் இப்படி என நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
உன்னைத்தவிர உன் குடும்ப பாரங்கள அத்தனையும் சுமந்து, நீ இல்லாத ஓரிடத்தில் அதுவும் நீ இல்லையென்பதை ஊரே தெரிந்த இடத்தில் அவள் தனியாக போராடிக்கொண்டிருப்பது உனக்கேன் புரியவில்லை? நீ இல்லாத வெற்றிடத்தை நிரப்ப முயலும் கழுகுக் கண்களிடையே தன் மானத்தையும் உன் குலப்பெயரையும் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அந்த உயிரிடம் பேசும் விதமா இது?
இவன் விடுப்புக்கு தாயகம் சென்றவுடன் தன் குழந்தையே தன்னருகில் வராதபொழுது ( சில சமயம் அங்கிள்- மாமா என அழைக்கப்பட்ட கதையும் உண்டு) இது உன் அப்பாடா செல்லம் பயப்படாதே, இங்க பாரு... அப்பா ஒனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காங்கன்னு! என இவன் குழந்தையை இவனுக்கே அறிமுகம் செய்து ஒரு வழியாக இவனுடன் ஒட்டவைக்கிறாள். நாட்கள் நகர்ந்து மறுபடியும் விமானமேறி இங்கு வந்த அடுத்த மாதம் என்னடீ.. அறிவு கெட்டவளே.... வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொள்ளும்.
பாறாங்கல் நெஞ்சே... உன்னையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் உன் பாதியை நீ அறிந்து கொள்வது எப்பொழுது? பண்பான வார்த்தைகளுடன் பாசத்தைப் பொழிந்து பார். கிழவனாக நீ முதிரும்பொழுது உன் பிள்ளைகள் திரும்பப்பொழியும் நீ பொழிந்ததை.
இனி மேலாவது வெள்ளிக்கிழமைகளில் அவளும் குழந்தைகளும் உன் பேச்சைக்கேட்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கையில் வசவு பாடாதே.

முகப்பு

மண் வாசனை இன்னும் மறக்கவில்லை. ஊர் வாசனையும் கூட. அலைந்து திரிந்து வாழும் வாழ்கையில் கண்டது கேட்டது எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள ஓரு வடிகால் வேண்டும் அது தான் இது